Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இந்த ஆட்சி, பெண்களுக்கு மிகப்பெரிய டிராஜடியாக மாறிவிட்டது" - முதல்வர் மீது உதயநிதி குற்றச்சாட்டு

"இந்த ஆட்சி, பெண்களுக்கு மிகப்பெரிய டிராஜடியாக மாறிவிட்டது" - முதல்வர் மீது உதயநிதி குற்றச்சாட்டு

மிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (03-09-26) முதல்வர் விஜய் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதையடுத்து, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கையை அத்துறையின் அமைச்சர் முதல்வர் விஜய் தாக்கல் செய்தார். அதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 'மக்கள் பிரச்சனை சார்ந்து நான் எழுப்பும் கேள்விகளுக்கு திசைதிருப்பவோ பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லாமல் முதல்வர் உரிய பதிலை கொடுப்பார் என நம்புகிறேன். இந்த அரசு கொடுத்திருக்ககூடிய கொள்கை விளக்க குறிப்பில், திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2024ஆம் ஆண்டை காட்டிலும் 2025 இல் பெருமளவு குறைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சாதிய பாகுபாடு கொலைகள் குறைந்திருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறீர்கள். எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது என காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டதற்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு அமைந்து சரியாக 116 நாள் ஆகிறது.

இந்த நாட்களில் இந்த அரசு புதிதாக திட்டங்கள் கொண்டு வந்ததை விட ஏற்கெனவே எங்களுடைய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த அரசிடம் இருந்து பெயர் மாற்ற அறிவிப்பு இல்லையென்றால், திட்டமே ரத்து என்ற அறிவிப்புகள் வருகிறது. உதாரணத்திற்கு பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈசிஆர் மேம்பாலம், மாமல்லன் நீர் தேக்கம் என்ற லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது. எங்களுடைய அரசு அமைந்த போது தமிழ்நாடு டாப் கியரில் போய்கொண்டே இருந்தது. ஆனால், இந்த அரசு அமைந்த பிறகு தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது. எங்களுடைய அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? விவசாய கடன் முழு தள்ளுபடி, வருடத்துக்கு 6 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என தேர்தல் வாக்குறுதியில் சொல்லிருந்தீர்கள். கொடுத்த வாக்குறுதியை முழுவதுமாக செயல்படுத்தாமல் இப்படி பாதி பாதியாக நிறைவேற்றப்போவதாக அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளீர்கள்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று சொன்னீர்கள், ஆனால் இந்த அரசினுடைய அறிவிப்புகளை பார்க்கும் போது எல்லா திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் வைக்கலாம். இந்த அரசினுடைய அறிவிப்புகள் மக்களிடம் சேர்வதை விட, இவர்கள் போடுகிற ரீல்ஸ் எல்லாம் மக்களிடம் ரீச் ஆனால் போதும் என்பதில் தான் இந்த அரசினுடைய செயல்பாடு இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறும்? இஸ்லாமிய சமூதாய தலைவர்களுடைய கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகளாக சிறையில் வாடிய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோலும் நீண்ட கால விடுப்பும் எங்களுடைய அரசு கொடுத்தது. அது போல் நீங்களும் நீண்ட நாளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோலும், நீண்ட கால விடுப்பும் கொடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டது. ஆனால், இன்றைக்கு சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை. இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் நிலைமை தான் இது. உங்களுடைய 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய டிராஜடியாக (Tragedy) மாறிவிட்டது.

தினமும் செய்திதாளை திறந்து பார்த்தால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என செய்திகள் வருகிறது. கறி கடைகளில் கூட இந்தளவில் வெட்டமாட்டார்கள். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தினமும் வெட்டுக்குத்து நடக்கிறது. கொலை நடக்காத நாளே இல்லை. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் மட்டும் 9 கொலைகள் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலை நடந்திருக்கிறது. அதில் ஒன்றுக்கு கூட முதல்வர் வாய் திறக்கவில்லை. கடந்த 2 வருடமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அரசை குறை கூறி ஆட்சிக்கு வந்த கட்சி, இப்போது தனிநபர் ஒழுக்கம் காரணம் என மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் தினம் தினம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran