Dailyhunt
"இந்த இரண்டு விரல்கள் நமக்கு வேண்டாம்" - பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி!

"இந்த இரண்டு விரல்கள் நமக்கு வேண்டாம்" - பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி!

திமுக அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கரூர் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியை விமர்சித்து பேசினார்.

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி.கே ராஜாவை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக குளித்தலை தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் குளித்தலை பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், '2016 ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதிமுக எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றாமல் திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து திமுக தலைவர் வாக்குறுதி மட்டுமே அளிப்பார் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார் என பொய் பிரச்சாரம் செய்கிறார். 2021 ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கைகள் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் வழங்காத வாக்குறுதிகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றி காட்டி இருக்கிறார். இப்போது வழங்கி இருக்கும் வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். திமுக ஆட்சி அமைந்ததும் திமுக வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

அதிமுக தமிழகத்துக்கு எதிரான கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்தித்து படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு காரணம் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான சட்டங்களை அதிமுக, ஒன்றிய அரசுக்கு ஆதரவளித்து மக்களுக்கு துரோகம் செய்தது தான். காரணம் இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு எதிராக, அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. சொந்தக் கட்சியில் உள்ள சசிகலா, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வெளியேற்றி, தன் சொந்தக் கட்சி தலைவர்களுக்கு துரோகம் செய்தவர் தான் பழனிசாமி. அவர் தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கூட்டணியை அமைத்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தேர்தல் முடிந்ததும் திமுக ஆட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் அப்பொழுது மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும்' என்றார் கனிமொழி. கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் 2000 ரூபாய் என்பதை ஆரவாரத்துடன் கூச்சலிடும் போது, 'எவ்வளவு தொகை' என்று மீண்டும் கனிமொழி கூட்டத்தில் உள்ள மக்களை பார்த்து கேட்டார். அப்பொழுது பொதுமக்கள் இரண்டு விரல்களை உயர்த்தி 2000 ரூபாய் என காண்பித்த பொழுது, 'இந்த இரண்டு விரல்கள் நமக்கு வேண்டாம், ஏனென்றால் இரட்டை இலை நமக்கு எதிரான சின்னம்' என்று பேசினார். பிரச்சார கூட்டத்தில் குளித்தலை திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சீ.கே.ராஜா உள்ளிட்டோர் இருந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran