Dailyhunt
"இது விவசாயப் பெருமக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்" - முதல்வர் சந்திரபாபு நாயுடு!

"இது விவசாயப் பெருமக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்" - முதல்வர் சந்திரபாபு நாயுடு!

த்திய அரசின் சட்ட மற்றும் நீதி அமைச்சகம், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதியிட்ட இந்திய அரசிதழில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தச் சட்டம், 2026-ஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி 2014ஆம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு (06.04.2026) அன்று தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். மேலும் இந்தச் சட்டம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 02 தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய திருத்தத்தின்படி, புதிய தலைநகரம் அமைக்கப்பட வேண்டும் என்ற வாக்கியத்திற்குப் பதிலாக, 'அமராவதி புதிய தலைநகராக இருக்கும்' என்ற தெளிவான திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விளக்கத்தில் 'அமராவதி' என்பது ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2014 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை, ஆந்திர மாநிலத்தின் தலைநகர் தொடர்பான நீண்டகால சட்டச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ச்ந்திரபாபு நாயுடு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆந்திரப் பிரதேச மக்கள் சார்பாக, எங்களின் தலைநகரம் குறித்த நீண்ட காலக் கனவை நனவாக்கும் வகையில், 'ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த சட்டம், 2026'க்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மாநிலத்தின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், இந்த மசோதாவிற்கு ஆதரவளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எங்கள் மாநிலத் தலைவர்களுக்கும், எங்களுடன் உறுதுணையாக நின்ற ஒவ்வொரு குடிமகன்ளுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆந்திரப் பிரதேச மக்களுக்கும், குறிப்பாக எனது விவசாயப் பெருமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்' எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran