கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கக் கடத்தல் சம்பந்தமான வழக்கு தேசிய அளவில் பெரும் புயலைக்கிளப்பியிருந்தது.
அந்த ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலமாகத் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத்தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்ட சில கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் முன்னாள் தூதரக ஊழியர் சரித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 16 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு 2021-ல் ஜாமீன் பெற்ற ஸ்வப்னா சுரேஷ், பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது ஊழல் புகார்களை எழுப்பி வந்தார். இந்த வழக்கு தொடர்ந்து தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தங்கம் கடத்தலில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், அதே வழக்கில் தொடர்புடைய பி.எஸ்.சரித்தைத் திருமணம் செய்துகொண்டார்.
கொச்சி நெட்டூரில் உள்ள வடக்கு பாட்டுபுரைக்கல் பகவதி அம்மன் கோயிலில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோரது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்வப்னா சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமண புகைப்படங்களைப் பதிவிட்டு, தங்களது திருமண வாழ்க்கைக்கு அனைவரின் பிரார்த்தனையும் ஆசிகளும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஸ்வப்னா சுரேசுக்கு கடந்த 2000ம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. அந்த திருமண வாழ்க்கை முறிந்துவிட்டது. பின்னர் 2011ம் ஆண்டு ஜெயசங்கர் என்பவரை 2வது திருமணம் செய்த நிலையில் அதுவும் விவாகரத்தானது. இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் தற்போது சரித்தை 3வதாக திருமணம் செய்துள்ளார்.

