பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவரது நண்பர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிங் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், வீரமணி வழக்கை கடந்த திமுக ஆட்சியில் ஏன் மூடி மறைக்கப்பட்டது என்றும், வீரமணி தப்பிச் சென்றது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் வீரமணியை தப்பிக்க, திமுக உதவியதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று (22-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'தவெக அரசு அவதூறுகளை பரப்பி இடைத்தேர்தலை சந்திக்கின்ற வேலையைதான் செய்து கொண்டிருக்கின்றது. தவெக அரசு அமைந்ததிலிருந்து தமிழ்நாடு ஒரு இருண்ட காலத்தில் இருப்பதை போன்ற ஒரு தோற்றம். இருள் சூழ்ந்து இருக்கிறது தமிழ்நாட்டில். ஆனால் இருள் சூழ்ந்த தமிழகத்தை முதன்முறையாக இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவிக்கப்படாத மின்வெட்டு, சீர்கெட்டு கிடக்கும் சட்டம் ஒழுங்கு, இரட்டை படுகொலைகள், போதை கும்பலுடைய அட்டகாசம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடங்கி வயதான மூதாட்டி வரை பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத சூழல் இந்த ஆட்சியில் இருக்கிறது.
ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம், ஏன் இவர்களை உட்கார வைத்தோம் என்று வேதனைப்படக்கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைய அரசு உருவாக்கி இருக்கிறது முதலமைச்சரை பொறுத்தவரைக்கும் ரீல்ஸ் எடுப்பதில் தான் பிசியாக இருக்கிறார். மக்கள் பிரச்சனையை இவர்கள் யாருமே கண்டுகொள்வதில்லை. பொய்களை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், அந்த பொய்யைச் சொல்லியே சமாளித்து ஆட்சியை ஓட்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டுகிறார்கள். எந்த பொய்யை சொன்னாலும் மக்களை நம்ப வைத்துவிட முடியும் என்று கனவு காண்கிறார்கள். எங்கள் மீது இல்லாத ஒரு வீண்பழியை சுமத்திக் கொண்டிருக்கிறார்கள் ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அன்றைக்கு ஒரு தன்னார்வாளர் வீடியோவுடன் ஒரு புகார் தருகிறார். அக்டோபர் 7ஆம் தேதி தேதியே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதன் மீது விசாரணை மேற்கொண்ட போது அந்த வீடியோ காட்சியில் கிளியர் பிக்சர் கிடைக்கவில்லை, கிளியரான எவிடென்ஸ் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கை வாபஸ் வாங்கி கொள்கிறோம் என்று சொல்லவில்லை. ஆதாரங்கள் கிடைக்கும் வரை பொறுத்திருக்கிறோம், ஆதாரங்கள் கிடைத்த பிறகு அந்த வழக்குத் தொடரப்படும் என்று தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம். இது தவிர எந்த வழக்கையும் வாபஸ் வாங்கவில்லை. வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களை திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல் விசாரணையை தள்ளி வைத்திருக்கிறோம், புதிய ஆதாரங்கள், சாட்சிகள் கிடைக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டு போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணையை எங்களுடைய காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.
ஆனால் இந்த ஆட்சியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி புகார் தரப்படுகிறது. 29ஆம் தேதி வாங்கிவிட்டு செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆட்சி கோமாவில் இருந்ததா? அல்லது டீலிங் எதுவும் பேசிக் கொண்டிருந்ததா? 25 நாட்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு இப்போது தான் பேசுகிறார்கள். எந்த தகவலையும் போக்சோ வழக்கில் கசிய விடக்கூடாது. ஆனால் அமைச்சர்கள் செய்திகளை கசியவிடுகிறார்கள். இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு யாரேனும் ஆதரவாக செயல்பட்டிருந்தாலும் அத்தனை பேரையும் ஆதாரத்தோடு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, யாருக்கும் உடந்தையாகவோ உறுதுணையாகவோ இல்லை' என்று கூறினார்.

