Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'காலையும், மாலையும்...'- நிபந்தனையுடன் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன்

'காலையும், மாலையும்...'- நிபந்தனையுடன் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன்

த.வெ.க. அரசை வீழ்த்தும் முயற்சியாக, அக்கட்சியில் உள்ள சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தலா ரூ. 35 கோடி வரையில் பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அதாவது த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்கப் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. மற்றொருபுறம் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, இது சம்பந்தமாக ஜூலை ஆறாம் தேதி நேரில் ஆஜராகக் கோரி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இருப்பினும் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் (06.07.2026) காலை 11 மணியளவில் அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியான நிவாரணம் கோரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (08.07.2026) பிற்பகல் விசாரணக்கு வந்தது. தற்பொழுது இந்த வழக்கில் செந்தில்பாலாஜி தரப்பு பல்வேறு கேள்விகளை வைத்தது. தவெக அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது எம்எல்ஏவின் கற்பனை வாதம் என செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன் வைத்துள்ளார். மேலும் 35 கோடி பேரம் பேசியது என்று கூறப்படுவத்து ஒரு யூகம்தான். அரசு தரப்பு முதல் தகவல் அறிக்கையின் படி பார்த்தாலும் இதுவரை பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை.

மனுதாரர்களை வழக்கில் சேர்ப்பதற்கு கரூர் இடைத்தேர்தல் தான் காரணம் என்ற செய்தியும் வெளியாகிறது. இடைத்தேர்தலில் கட்சிக்காக பணியாற்றுவதை தடுக்க வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குதிரை பேரத்துக்கு ஆதாரம் உள்ளதா? சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஒரு ஆட்சியை கவிழ்க்க முடியாது. திருநாவுக்கரசு, அசோக்குமார் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தது ஒரு ஆதாரமா? சாதாரண தொலைபேசி உரையாடலை தனக்கு சாதகமாக மாற்றி அரசை கவிழ்க்க முயற்சி என்கின்றனர்.

திமுகவுக்கு 59 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒருவருக்கு 35 கோடி கொடுக்க முன் வருவார்களா? அனைத்து கட்சியினரும் சேர்ந்து ஆதரித்து தான் சபாநாயகரை தேர்வு செய்துள்ளனர். 59 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? என வாதங்கள் வைக்கப்பட்டது.

அதேநேரம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன் 'ஹோட்டலில் வைத்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாகவும் செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது' என வாதத்தை முன்வைத்தார். காவல்துறை தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'குற்றம் சாட்டப்பட்டோரை அசோக்குமார் சுமார் 40 முறை சந்தித்துள்ளார். எம்எல்ஏவுக்கு லஞ்சம் கொடுக்க சதி திட்டம் சென்னையில் முக்கிய இடங்களில் தீட்டப்பட்டன. கிண்டி நட்சத்திர ஓட்டல், ஈசிஆரில் உள்ள ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளது. சதியை நிரூபிக்க சிசிடிவி ஆதாரங்கள் ஹோட்டலில் இருந்தன. அவற்றில் சில காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அந்த ஹோட்டலில் இருந்ததை அவர்களின் மொபைல் லொகேஷன் உறுதிப்படுத்தியுள்ளது' என வாதம் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி இளந்திரையன், குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். தினமும் காலை மாலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran