Dailyhunt
"கனமழை... அதிகபட்ச வெப்பநிலை..." - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

"கனமழை... அதிகபட்ச வெப்பநிலை..." - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மிழகத்தில் அடுத்த ஒரு சில நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (30.04.2026) நண்பகல் 01.15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், 'கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 65.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதே சமயம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், மற்ற இடங்களில் இயல்பை ஒட்டியும் காணப்பட்டது.

மாநிலத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக அரியலூரில் 24.5 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் ஊட்டியில் 12.2 டிகிரி செல்சியஸும் நிலவியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒரு நாளில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் பதிவாகவில்லை. மேலும், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, இன்று முதல் மே 2ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்; மேலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மே 2ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவற்றுடன் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் குறிப்பிட்ட தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து மே 3 முதல் மே 6ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நீடிக்கக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலையின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும். அதிலும் குறிப்பாக, கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால் அசௌகரியம் ஏற்படலாம். சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran