Dailyhunt
கொசுவலையால் ஆன உடையுடன் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.!

கொசுவலையால் ஆன உடையுடன் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.!

தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அம்மாநில அரசு பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளாதவர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை பிடித்தம் செய்து, அதனை நேரடியாக அவர்களது பெற்றோர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தும் சட்டத்திற்கான மசோதாவை நிறைவேற்றியிருந்தது. இது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், தெலுங்கானாவில் தலைநகர் ஐதராபாத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் இந்த லட்சிய போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டி.சுதீர்ரெட்டி சமீபத்தில் கொசுவலையைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட ஆடையை அணிந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, நகரம் முழுவதும் கொசு பரவலைக் கட்டுப்படுத்த தவறியதாக ஆளும் காங்கிரஸ் அரசைக் குற்றம் சாட்டிய அவர், நகரின் ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தபட்சம் 10 கொசுமருந்து அடங்கிய புகை தெளிக்கும் இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது தவிர ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை ஆங்காங்கே தெளிப்பது, ஆகாயத் தாமரைகளை அகற்றுவது உள்ளிட்ட பிற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கொசுக்களின் படையெடுப்பு காரணமாக ஹைதராபாத்தில் நிலவும் மோசமான சூழலை விவரிக்கும் பொருட்டு, தாம் கொசுவலையை ஆடையாக அணிந்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு மத்தியில் ஹைதராபாத் நகர் மக்கள் எதிர்கொள்ளும் யதார்த்த அவதியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். நகரம் முழுவதும் கொசு மருந்து தெளித்தல், கம்பூசியா மீன்களை விடுதல் போன்ற பணிகளில் ஊழல் நடப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் என்றும் குற்றம் சாட்டினார். இது போன்ற கொசு பரவல், மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவ வழிவகுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran