நாடாளுமன்றக் கூட்டத்தொடரை வரும் ஏப்ரல் 16,17 ஆகிய தேதிகளில் மத்திய அரசு கூட்டியுள்ள நிலையில் அதனை ரத்து செய்ய ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரண்டு முக்கியமான மாநிலங்களில் ,குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இவ்வளவு அவசரமாகக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது?
நேர் வழியில் மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெல்ல முடியாத பாஜக இதுபோல் குறுக்கு வழியில் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்று நினைப்பதும், அதற்காக மதிப்பு மிகுந்த நாடளுமன்றத்தைப் பயன்படுத்த நினைப்பதும் அவமானகரமானது.
மகளிர் இடஒதுக்கீடு மசோவை நாங்கள் வரவேற்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வரலாறு படைத்த கட்சி காங்கிரஸ் கட்சி.ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டின் பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைந்த அளவில் அதிகரித்து உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களின் நாடளுமன்றத் தொகுதிகளை மிக அதிக அளவில் அதிகரிப்பதை நாங்கள் ஏற்க முடியாது.
தென் மாநிலங்களில் வெற்றி பெறாமலே ஒரு கட்சி, ஒன்றிய அரசில் ஆட்சி அமைக்க முடியும். இதனால் அதிக அளவில் வரிகட்டுகிற தென்மாநிலங்களுக்கு முக்கியமான பிரச்சனைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமல் போகும். ஆகவே இது குறித்து முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும். அதில் ஒத்தகருத்து ஏற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்.
உடனடியாக தேர்தல் நேரத்தில் கூட்டப்பட்டிருக்கிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

