Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர்" - ஜெயக்குமார் விமர்சனம்!

"குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர்" - ஜெயக்குமார் விமர்சனம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை மற்றும் கழிவறைகளைப் பார்வையிட்ட அவர், அவற்றின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள கணினி அறிவியல் ஆய்வகத்தில் கணினிகள் பயன்படுத்தப்படாமல் தூசிகள் படிந்து மூடி வைக்கப்பட்டிருந்தது குறித்தும் அங்கிருந்தவர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா, அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது அமைச்சரின் ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றின் பொருளைப் புரிந்து படிக்கும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அப்போது அவர், முதல் பெஞ்ச் மாணவியே தடுமாறும்போது, கடைசி வரிசையில் (Last Bench) அமர்ந்திருக்கும் மாணவிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

இந்த ஆய்வு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அமைச்சரின் இந்த ஆய்விற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், குழந்தைகளுக்கான உரிமை ஆர்வலர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்றைய அரசு பள்ளி மாணவர்கள் நாளை நமது தேசத்தின் தலைவர்கள்.

ஒரு பெண் அமைச்சர், அரசு பள்ளியில் 'ஆய்வு' என்ற பெயரில், கேமராக்களை வைத்துக் கொண்டு, தனக்கு ஆங்கிலம் தெரியும் என்ற உடல் மொழியுடன் ஆய்வு என்ற பெயரிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தையிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும்; அதற்கு பதில் சொல்ல தடுமாறும் பொழுது, அந்த குழந்தையை வைத்துக் கொண்டே, இந்த மாணவிக்கு சிம்பிள், சிம்பிளான கேள்வி தான் இதுவே தெரியவில்லை என்று அந்த குழந்தையை வைத்துக் கொண்டே சொல்வதும் ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்வதும். இதைப் பார்க்கும் பொழுது, அந்த குழந்தைகளின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையும், ஒரு காயத்தையும் ஏற்படுத்தி இருக்கும்

பள்ளி குழந்தைகளின், அவர்களின் அறிவு சார்ந்த சிறிய முயற்சியைக் கூட, குழந்தைகளை மனம் மகிழ்சியடையும் படியும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்திலும்,ஆல் தி பெஸ்ட், சூப்பர் என்று ஊக்கப்படுத்த வேண்டும். தட்டிக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் முன்னாள் இந்திய ஜனாதிபதி இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம், பேரறிஞர் அண்ணா. இதே மாணவி நாளை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக வரலாம். இன்றைய தா வெ க அரசுக்கும் அமைச்சர்களுக்கும் நிர்வாகம் தான் தெரியவில்லை என்றால் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர்' எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran