குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம் அடாஜன் பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன் (47). இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவரை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 1 அன்று அவர் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அதாவது, மகாத்மா காந்தியின் மரியாதையைக் குலைக்கும் விதமாகப் பேசி, ஆபாசமான செய்கைகளைக் கொண்ட ரீல்ஸ் வீடியோவினை, அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சூரத் காவல்துறை சிம்ரனைக் கைது செய்து, விசாரணை நடத்தியது. இதையடுத்து, சிம்ரன் தான் செய்த தவற்றை உணர்ந்து வருந்தினார். மேலும், நடந்த சம்பவம் குறித்தும் , வீடியோ குறித்தும் மன்னிப்பு கேட்டு சிம்ரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற தவறான வீடியோக்களை யாரும் பதிவிட வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். எனினும், கைதுசெய்யப்பட்ட சிம்ரனை சிறையில் அடைத்த காவல்துறையினர், சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

