Dailyhunt
"மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்" - வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு அமைச்சர் எ.வ. வேலு நம்பிக்கை!

"மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்" - வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு அமைச்சர் எ.வ. வேலு நம்பிக்கை!

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தி.மு.க.

உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எ.வ.வேலு நான்காவது முறையாக களம் காண்கிறார். இதற்கு முன்பு 1984, 2001, 2006 ஆகிய காலகட்டத்தில் தண்டராம்பட்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தண்டராம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டதால் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட தொடங்கினார். 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதுவரை 6 முறை களத்தில் நின்று 6 முறையும் வெற்றி பெற்றுள்ளார். ஏழாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எ.வ.வேலு, ஏப்ரல் ஆறாம் தேதி தனது வேட்புமனுவை திருவண்ணாமலை கோட்டாச்சியரிடம் தாக்கல் செய்தார்.

அதன் பின் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, 'இந்த தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதியில் 7 தொகுதிகளில் திமுகவும் ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான தேமுதிகவும் போட்டியிடுகிறது. எட்டு தொகுதியிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள் என்னை வெற்றி பெறவைப்பார்கள். திருவண்ணாமலை தொகுதிக்கு வேண்டிய பணிகளை அரசிடம் வலியுறுத்தி எந்தெந்த திட்டங்களை நிறைவேற்ற முடியுமோ அந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறேன். இன்னும் தேவையான திட்டங்களை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி பெற்றுவந்து செய்வேன். கடந்த காலத்தை விட இன்னும் கூடுதலாகவே மக்கள் பணி செய்வேன்' என்றார்.

மேலும், கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 95 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்று இருந்தார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த தேர்தலிலும் அதே அளவுக்கு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என திமுக உடன் பிறப்புகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran