மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இனி மூன்று மொழிகளைக் கற்பது கட்டாயம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் இந்த புதிய மொழிவழிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, மாணவர்கள் தங்களது வழக்கமான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகள் உட்பட மொத்தம் மூன்று மொழிகளைக் கட்டாயமாகத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்தவும், இந்திய மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த புதிய பாடத்திட்ட மாற்றத்தில் ஒரு முக்கியச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய இந்த மூன்றாவது மொழிப் பாடத்திற்குத் தனியாகப் பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த மூன்றாவது மொழியானது மாணவர்களின் உள்மதிப்பீட்டு முறையில் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்பதால், மாணவர்கள் பொதுத்தேர்வு பயமின்றி புதிய மொழிகளைக் கற்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மொழியியல் பாரம்பரியத்தை இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் மொழி திணிப்பு, மாணவர்களுக்கு கடும் சுமை ஏற்படும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

