Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல" - கொந்தளித்த பெ.சண்முகம்!

"மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல" - கொந்தளித்த பெ.சண்முகம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் முதலாவதாகப் பாடப்படும். அதனை தொடர்ந்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணை வேந்தர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு 3வது இடம் அளிக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 'திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழியின் மீது நடைபெறுகிற அத்துமீறலாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும்.

இந்நிலையில் ஆளுநர் அலுவலக சுற்றறிக்கை விரும்பத்தகாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அநீதியானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதையாகும். மேலும் வந்தே மாதரம் பாடலின் சில வரிகள் பாடப்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, வந்தே மாதரம் பாடலின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்பட வேண்டும். ஆளுநரின் சுற்றறிக்கை திரும்பபெறப்பட வேண்டும். ஆளுநர் அலுவலக சுற்றறிக்கையின்படி நடக்காவிட்டால் தன்மீது நடவடிக்கை வரும் என்று துணைவேந்தர் கூறியிருப்பதிலிருந்தே ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகள் செய்து மிரட்டலில் ஈடுபடுகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுநர் அலுவலகத்தின் அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக வந்தே மாதரத்தின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்படும் வகையில் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டுமென்றும் இந்த அடிப்படையில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிற மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டுமென்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது' என்று தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran