சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 5 வருட திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்களில் வென்று தவெக ஆட்சி அமைக்கவுள்ளது.
ஆனால், 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. தவெக அதிக இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி த.வெ.க. தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் ஒன்றை அனுப்பினார். இதனையடுத்து அந்த மின்னஞ்சலுக்கு, ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விஜய்யை 'மரியாதைக்குரிய முதலமைச்சர் விஜய் (hon'ble CM met governor)' என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ இணைப்புடன் கூடிய செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அதாவது விஜய் இன்னும் பதவி ஏற்காத நிலையிலும், தவெக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரக் கால அவகாசம் கோரியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை அவரை முதலமைச்சர் எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, விஜய் ஆளுநரை நேரில் சந்தித்து காங்கிரஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

