இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது.
இதில், திமுக நிர்வாகியான வி.பி.கலைராஜன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிவண்ணன், கீதா மணிவண்ணன், நிலக்கோட்டை அன்பழகன் மற்றும் நடிகர் ரவிமரியா உள்ளிட்டோர் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் விஜய் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவெக வில் இணைந்தவர்களை நேரில் சந்திக்கிறார். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பாக தவெகவில் இனைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் இன்பதுரை மற்றும் பலரையும் நேரில் சந்திக்கிறார்.
தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதலே, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து இக்கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். இதுவரை, ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

