தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மாநில மக்கள் இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் 118 என்ற இலக்கை எட்ட முடியாததால், விஜய் முதல்வராவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் தொடர்ந்து பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார்.
அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் தவெகவுடன் இணைந்துள்ளது. மேலும், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தங்களுக்கு ஆதரவு தரும்படி தவெக கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும் அதிமுகவிடமும் தவெக சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, தஞ்சாவூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற விஜய் சரவணன். கையில் மதுபாட்டிலுடன் மதுபோதையில் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு தனியார் விழாவில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் சரவணன் மிகுந்த மது போதையில் தடுமாறிய நிலையில் நடனமாடுவதும் உற்சாகமாகப் பேசுவதும் தெரிகிறது. மேலும், அந்த ஆடியோவில், 'ஒருவர் மாநிலம் நம்பர் இருக்கிறது. அவருக்கு இந்த வீடியோவை அனுப்பவா?' என்று கேட்க உடனே ஒரு குரல் அவன் என்ன பெரிய ஆளா என்று தகாத வார்த்தைகளில் திட்டுவதும் தெளிவாகக் கேட்கிறது.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, தவெக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. தஞ்சை மாவட்டத்தில் புதிதாக உருவெடுத்துள்ள எம்.எல்.ஏ-வின் இத்தகைய செயல், கட்சியின் பிம்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து பெரும் வெற்றி பெற்ற ஒரு புதிய எம்.எல்.ஏ-விடமிருந்து இத்தகைய நடத்தை எதிர்பார்க்கப்படவில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.

