மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதன்படி, கடந்த 15ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை சுமார் 3.10 ரூபாய்க்கும், டீசல் விலையை லிட்டருக்கு 3.08 ரூபாய்க்கும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளுக்கும் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.46க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.11க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் லிட்டருக்கு 87 காசுகளும் அதிகரித்தது. இதன் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.31க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96.98க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், நான்காவது முறையாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 காசுகள் உயர்ந்து ரூ.107.77க்கு விற்பனையாக உள்ளது. அதே போல் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகள் உயர்ந்து ரூ.99.57க்கு விற்பனையாக உள்ளது. சர்வதேச சந்தை சூழல்கள் மற்றும் மேற்காசிய போர் சூழல் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.50 காசுகள் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களில் 4வது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சாமானிய மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

