தமிழ்நாடு, கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் முடிவுகள் இந்த மாதம் 4 ஆம் நாள் வெளியானது. இதில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த முடிவுகள் வெளியாகின. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
குறிப்பாக, மேற்குவங்கத்தில் கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக பாஜக வரலாற்றில் முதன்முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக மாறியுள்ளது.
இந்நிலையில், 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக விற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் குஷ் தேசாய் நேற்று அளித்த பேட்டியில், ''இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்காகப் பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவிக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

