மேற்குவங்கத்தில் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து, மே 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், ஒரு தொகுதியைத் தவிர்த்து, மீதமுள்ள 293 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக 207 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்றுள்ள பாஜக பதவியேற்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரத்தில், இந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை திரிணாமுல் காங்கிரஸ் சந்தித்துள்ளது. குறிப்பாக, மம்தா பானர்ஜியும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று முறை தேர்தலில் வென்று 15 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தற்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். இதனால், மேற்குவங்கத்தில் அரசியல் களம் பரபரப்பான சூழலில் இருந்து வருகிறது.
இதனிடையே, இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், " மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்தவர் மம்தா பானர்ஜி. அங்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றியிருக்கும் என நம்புகிறேன். மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகளில் 91 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுவும் கூட தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

