மேற்குவங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் போட்டுள்ளது. முதல்முறையாக இங்கு பாஜக ஆட்சியமைக்க உள்ளது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களுடன் படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது, பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியது. இதன் காரணமாக, ஒரு தொகுதியில் மறு வாக்குப் பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வாறான சூழலில் மே 4 அன்று 293 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போதும் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
இதனிடையே, பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வேட்பாளர்களைத் தாக்கியதாகவும் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இதனிடையே, பீம்பூர் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை (மே 4) அன்று தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தலைநகர் கொல்கத்தா மட்டுமல்லாமல் ஹௌரா, பர்ஹாம்பூர் மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கொல்கத்தாவின் டோலிகுங்கே பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அரூப் பிஷ்வாசின் அலுவலகம் ஒரு கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.
அதே போல, ரூபி கிராஸிங் பகுதியில் பாஜக கொடியுடன் வந்த ஒரு கும்பல் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுஷாந்தா கோஷ் அலுவலகத்தையும் சூறையாடியுள்ளது. பல்வேறு இடங்களில் பாஜகவினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கள் மீதான இந்த புகாருக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

