Dailyhunt
"மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது" - காட்டமாக விமர்சித்த காங்கிரஸ்!

"மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது" - காட்டமாக விமர்சித்த காங்கிரஸ்!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான எரிபொருள் வரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வணிக எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள், தேநீர்க்கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்திலும் கால தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. எற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக இன்று (01-05-26) வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்ந்து 3,071.50 ரூபாய்க்கு இன்று (01.05.2026) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.968 உயர்ந்து ரூ.3237க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை வானை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் ஹோட்டல் வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், சிலிண்டர் விலை உயர்வால் ஏற்படப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 'விலைவாசி உயர்வின் நாயகன் மோடி, மீண்டும் தனது சாட்டையால் அடித்துள்ளார். இன்று, வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.993 அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில், மோடி வர்த்தக சிலிண்டர்களின் விலையை ஜனவரி 1 -ரூ.111, பிப்ரவரி 1 -ரூ.50, மார்ச் 1 -ரூ.31, மார்ச் 7 -ரூ.115, ஏப்ரல் 1-ரூ.218, மே 1 -ரூ.993 என உயர்த்தியுள்ளார். சிறிய அளவிலான 5 கிலோ சிலிண்டர் விலையைக் கூட கடுமையாக உயர்த்திவிட்டனர். முதலில் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி சிலிண்டர்களை விநியோகித்தனர். பின்னர் அவற்றின் விலையை உயர்த்தினர், பா.ஜ.கவினர் மிகவும் தந்திரமான பேர்வழிகள். இந்த ஆண்டில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது. மோடி அரசுக்கு மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க மட்டுமே தெரியும்' என விமர்சித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran