Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக "மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு" முக்கிய ஆலோசனை!

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக "மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு" முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்தது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி கடுமையான சரிவை எதிர்கொண்டு, வெறும் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் திமுக வரலாறு காணாத பின்னடைவைச் சந்தித்தது.

அதிலும் குறிப்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தான் நீண்டகாலமாக வென்று வந்த கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதே போன்று மூத்த அமைச்சர் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்களும் தங்களது சொந்தத் தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவினர். இத்தகைய சூழலில் தான் தோல்விக்கான உண்மையான காரணங்களை விரிவாக ஆராய அக்கட்சியின் சார்பில் 36 பேர் கொண்ட 19 கள ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி தங்களது அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பித்தன.

இதனையடுத்து தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத் தேர்தல் பணிகளைச் சீரமைக்கவும் புதிய "கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை" மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி, எஸ். எஸ். சிவசங்கர், தமிழரசி ரவிக்குமார் மற்றும் எம்.எம். அப்துல்லா, இ. பரந்தாமன், ச. முரசொலி எம்.பி., எழிலன் மற்றும் எஸ்.கே.பி. கருணா உள்ளிட்ட 10 முக்கியப் பிரமுகர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (02.07.2026) நடைபெற்றது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தங்கம் தென்னரசு, எஸ். எஸ். சிவசங்கர், இ. பரந்தாமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கட்சியின் பல்ப்வேறு அணிகளை மறுகட்டமைப்பு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இக்குழுவினர் தங்களது விரிவான இறுதிப் பரிந்துரை அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மு.க. ஸ்டாலினிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran