தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பல்வேறு திருப்பங்களைக் கொண்டதாக அமைந்துவிட்டது. இதில், யாரும் எதிர்பாராத பல்வேறு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
அந்த வகையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் புரட்டி போட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையில், திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, தனது கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது மு.க.ஸ்டாலினிடம் பேசிய அவர், "நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. நீங்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியினரின் விருப்பமாக உள்ளது. சொல்லப்போனால், தமிழ்நாட்டின் விருப்பம் அதுதான். அதனால், சிதம்பரம் தொகுதியில் நான் ராஜினாமா செய்துவிடுகிறேன். நீங்கள் போட்டியிடுங்கள் என்று கூறினேன்.
இதனைக் கேட்டு மனம் உருகிய மு.க.ஸ்டாலின், என் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு, இந்த வார்த்தையை நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் சட்டமன்றம் சென்று சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

