கேரளம் மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேப்பாடில் உள்ள வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் நேற்று (07.07.2026) நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து செண்ற போலீசாரும், மாநில நிர்வாகம் மற்றும் என்.டி.ஆர்.எஃப். அமைப்பின் இரு குழுக்கள் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் கேரளம் முதலமைச்சர் வி.டி. சதீசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வயநாடு துயரச் சம்பவம் கேரளாவை ஆழமாக உலுக்கியுள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.
இன்று (08.07.2026) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, நான் வயநாட்டிற்குப் புறப்பட்டு, மதியம் சுமார் 1 மணியளவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மீனாட்சி பாலப் பகுதியை நேரில் பார்வையிடுவேன். இத்துயரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் நாங்கள் உறுதுணையாக நிற்போம். வயநாட்டிற்கு ஆதரவாகக் கேரளம் ஒன்றிணைந்து நிற்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

