அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருடைய ராஜினாமாவை ஏற்றுச் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க.
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி அமர்வு இன்று (01.09.2026) விசாரணை நடத்தியது. அதன்படி இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையின்போது, இசக்கி சுப்பையா தரப்பில் வாதிடுகையில், 'எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுகிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் எனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக என்னைப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடந்த 28ஆம் தேதி கடிதம் அளித்துள்ளேன்' எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக இசக்கி சுப்பையா தரப்பிலிருந்து கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்ய இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, இந்தக் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். இதனிடையே, தனது ராஜினாமாவைத் திரும்பப் பெறக் கோரி இசக்கி சுப்பையா சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில், இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுவதற்கு விதிகள் இல்லை எனச் சட்டப்பேரவை செயலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைப்பட எழுதி அளித்த ராஜினாமா கடிதம், சபாநாயகரிடம் நேரில் வழங்கப்பட்டு, சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அரசிதழில் வெளியிடப்படும். அத்துடன், அதன் நகல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டும். எனவே ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜினாமாவை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான விதிகள் இல்லை எனச் சட்டப்பேரவை செயலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பதில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் இருந்து நாளை (02.09.2026) இசக்கி சுப்பையாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு, இந்த விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

