உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலின் காணிக்கை திருட்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை தொடங்கியதையடுத்து, இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவரான, அவினாஷ் சுக்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இவர் கடந்த சில ஆண்டுகளாக அயோத்தி ராமர் கோயில் காணிக்கை எண்ணும் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். அவர், அங்குத் திருடிய காணிக்கை பணத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ரூ.19 லட்சத்தை வழங்கியுள்ளார்.
தனது சகோதரனின் திருமணத்திற்காக ரூ.6 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மற்றொரு சகோதரனுக்கு கிட்டதட்ட 6 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், தனது காதலிக்கு 2.5 லட்ச ரூபாயை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். மேலும், காதலிக்கு ஐபோன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், அவர் புதிதாக கார் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவரிடம் இருந்து ரூ.20.39 லட்சம் ரொக்கம், ரூ.1 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் புதிதாகப் பிரமாண்ட வீடு ஒன்று கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது சம்பந்தமாக மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

