புனே மெட்ரோவில் ராம்வாடி மெட்ரோ நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி ஒன்றின் கூரையிலிருந்து திடீரென தண்ணீர் கொட்டியது.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக புனே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மும்பை - புனே நெடுஞ்சாலையில் உள்ள பானர் - மலுங்கே ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், வாகனங்கள் மிக மெதுவாகச் சென்றதாலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அலுவலக நேரம் என்பதால் ஹிஞ்சவடி தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்கு செல்லும் ஐடி ஊழியர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அன்றாடப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் பல மணி நேரம் காரிலும் பேருந்துகளிலும் சிக்கித் தவித்தனர்.
அதேநேரம் மெட்ரோ ரயிலின் கூரையில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ வெளியான நிலையில் கனமழை காரணமாக மழைத் தண்ணீர் மெட்ரோ ரயிலின் உள்ளே புகுந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில் புனே மெட்ரோ நிர்வாகம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.
இதுகுறித்து புனே மெட்ரோ நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதில் பெட்டிக்குள் கொட்டியது மழைநீர் அல்ல, ரயிலின் குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆகும். ஏசி வடிகால் குழாயில் தூசி அடைத்துக் கொண்டதால், ஏசியிலிருந்து வெளியேற வேண்டிய ஒடுக்க நீர் வெளியேற முடியாமல் பெட்டிக்குள் கசியத் தொடங்கியது. உடனடியாக அந்த ஏசி அமைப்பு அணைக்கப்பட்டு, ரயில் சரிசெய்யப்பட்டது. எனவே, இதை மழைநீர் கசிவு என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

