தமிழகத்தில் நாளை மறுநாள் (23.04.2026) சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இறுதிக்கட்ட பிரச்சாரம் களம் அனலாக மாறியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் இன்று (21.04.2026) மாலை 6 மணியுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையும் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தேர்தல் குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 44 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக மாவட்ட விவசாய அணியின் துணை அமைப்பாளர், கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூரில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

