Dailyhunt
"ரூ.8,000 கூப்பன் திட்டம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்" -அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

"ரூ.8,000 கூப்பன் திட்டம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்" -அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

மிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இல்லத்தரசி கூப்பன் திட்டம் குறித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 'இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான வாஷிங் மிஷின், டிவி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ முடியும்.

வீட்டு உபயோகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்தான், இல்லத்தரசி திட்டத்தின் ஹைலைட்! முந்தைய காலங்களில் அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்ற ஒரே மாதிரியான பொருளாக இல்லாமல், கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் வாங்க முடியும். உரிமைத் தொகை என்ற சொல்லை அளித்த மு.க.ஸ்டாலின் அரசுதான், 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டத்தில் விரும்பிய பொருட்களை வாங்கும் உரிமையையும் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறது.

எங்காவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போட்டிருக்கிறார்களா? என வீட்டு உபயோகக் கடைகளைப் பார்வையிடும் மற்றவர்களிடம் கேட்கும் பெண்களின் மனதிற்குள் இருக்கும் ஏக்கத்தை எத்தனை பேர் அறிவார்கள்? வீட்டில் மக்கர் பண்ணிக் கொண்டிருக்கிற பழைய மின்சாதனப் பொருளை மாற்ற ஒரு வசதி வராதா? என ஏங்கும் எத்தனையோ லட்சம் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு பொருள் அவர்கள் வீட்டுக்குள் வந்தால், அது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு வரம் மட்டுமல்ல. வர்க்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! அதனை உணர்ந்துதான் பழைய பொருட்களை மாற்றும் அம்சத்தையும் இந்தத் திட்டத்தில் சேர்த்தது திமுக. பழைய வீட்டு உபயோகப் பொருட்களைக் கடைகளில் கொடுத்துவிட்டு, கூப்பனைப் பயன்படுத்தி புதிய மாடல் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம். பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டுப் புதியவற்றை வாங்கிக் கொள்ளும் வசதியால், பழைய பொருட்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் உள்ளூர் வணிகமும் இன்னொரு பக்கம் புத்துயிர் பெறும்.

சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பயன் அளிப்பதால் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள், தங்கள் வீட்டுத் தேவைகளுக்காகச் செய்யும் செலவில் இருந்து நிம்மதி பெறுவார்கள். அவர்களின் பொருளாதாரச் சுமை குறையும். பெண்களின் வாங்கு திறனை (Purchasing power) அதிகரித்து சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நலத்திட்டங்களுக்கும் நிதி மேலாண்மைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணும். இது வெறுமனே 'இல்லத்தரசி கூப்பன் திட்டம்' மட்டுமல்ல. உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 'உள்ளூர் வணிகம் - இல்லத்தரசிகளின் தேவை' என இரு தரப்பையும் இணைக்கும் ஒரு பாலமாக அமையும். இந்தத் திட்டத்தில் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கும் போது உள்ளூர் சிறு மற்றும் குறு வணிகர்களின் விற்பனை அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை பெரிய காப்ரேட் நிறுவனங்களில் அரசு டெண்டர் விட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. 'இல்லத்தரசி கூப்பன் திட்டம்' பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பதில் உள்ளூர் வணிகர்களின் விற்பனையை நேரடியாக அதிகரிக்கும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் பத்து மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே போல இல்லத்தரசி 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது. நலத்திட்டப் பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, விநியோகிப்பதுதான் இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை. ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக நலத்திட்டப் பொருளைப் பயனாளிகளே நேரடியாக முடிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தது திமுக மட்டும்தான்' என்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran