Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சபரிமலை தரிசன முன்பதிவில் தேவசம் போர்டு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

சபரிமலை தரிசன முன்பதிவில் தேவசம் போர்டு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

அதாவது தினசரி 80 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்திருந்தாலும், அதில் பாதிக்கும் குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு நடத்திய விசாரணையில், தரிசன முன்பதிவில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மண்டல பூஜை காலத்திற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள காவல்துறை இணைந்து அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

அதாவது பிற மாநிலங்களைச் சேர்ந்த சில டிராவல் ஏஜென்சிகள் தரிசன டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து, அவற்றைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும், முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு வராமல் இருப்பதையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு செல்லாமல், அதனை முன்கூட்டியே ரத்து செய்யாத பக்தர்களுக்கு இந்த மண்டல சீசனில் மீண்டும் ஆன்லைன் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாது.

குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு செல்ல முடியாத பக்தர்கள், தங்களது பயணத் தேதியை மாற்றிக்கொள்ளவும் அல்லது முன்பதிவை ரத்து செய்யவும் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலி முன்பதிவுகளைத் தடுக்க, ஒவ்வொரு பக்தரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை (OTP) உள்ளீடு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பலர் தரிசனத்திற்கு வராததால், நவம்பர் 30ஆம் தேதி வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் தரிசன அனுமதி வழங்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இலவசமாக முன்பதிவு செய்யுமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. முன்பதிவு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தேவசம் போர்டு மற்றும் கேரள காவல்துறை இணைந்து கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran