தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியை தி.மு.க கூட்டணியில் மீண்டும் தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டு நடப்பு சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (04-04-26) தி.மு.க கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பேராவூரணியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் பழனிவேல், காங்கிரஸ் தெற்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன், காங்கிரஸ் மாஜி சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியதாவது, 'இப்போது நடக்கும் தேர்தல் மதச்சார்பற்ற கூட்டணிக்கும், மதச்சார்புள்ள கூட்டணிக்குமான தேர்தல். நாம் மதச்சார்பற்ற அணி' என்றவர், கூட்டத்தில் 5 வது வரிசையில் இருந்த ஒருவரை எழுந்திரிக்கச் சொல்லி, 'நீ சி.பி.எம் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர், அசோக்குமார் தி.மு.க. உங்க சித்தாந்தத்தை எங்களிடம் புகுத்தக்கூடாது. அதனால் அசோக்குமார் தோல்வியடைந்தால் நீ தான் பொறுப்பு' என்றார்.
மேலும், 'காங்கிரஸ்காரர்களை பார்த்தாலே சாணி எடுத்து அடிக்கத் தோன்றும், அது முன்னால்' என்று பேசிய போது காங்கிரஸ்காரர்கள் முகம் இருண்டது. தொடர்ந்து அவர், 'இங்கே காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் இருக்கிறார். அவர் எனக்கு இந்திரா காந்தியை தெரியும், ராஜீவ் காந்தியை தெரியும், பிரனாப் முகர்ஜியை தெரியும் என்பார். ஆனால் மகேந்திரனை மதிக்கமாட்டார். மகேந்திரன் எனக்கு ராகுல் காந்தியை, தெரியும் பிரியங்காவை தெரியும் என்பார். மகேந்திரனை நல்லா சேவிங் செஞ்சுட்டு வான்னு சொல்லிருக்கேன்' என்றார்.
அடுத்து தி.மு.க தஞ்சை தெற்கு மா.செ பழனிவேலுவைப் பார்த்து, 'உன் ட்ரெஸ் என்னய்யா காங்கிரஸ்காரன் போல கதர் சட்டையா இருக்கு. தி.மு.க காரன் போல உடை அணியனும்' என்று பேசினார். மொத்தத்தில் மாஜி பழநிமாணிக்கம் பேசி முடிக்கும் போது தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினால் அவரை தோற்கடிக்கும் நோக்கத்திலேயே பழநிமாணிக்கம் பேச்சு உள்ளதே என்று முனுமுனுத்துச் சென்றனர்.

