Dailyhunt
சசிதரூர் பாதுகாவலர் மீது தாக்குதல்; மர்ம நபர்களின் பகிர் சம்பவம்

சசிதரூர் பாதுகாவலர் மீது தாக்குதல்; மர்ம நபர்களின் பகிர் சம்பவம்

கேரளத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சசி தரூர் மலப்புரம் மாவட்டம் திருவாலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03-04-26) அன்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அந்த பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியில் செலித்தோடு பழத்தின் அருகே இரண்டு வாகனங்களில் வந்த சிலர் சசி தரூர் செல்லும் பாதையை முடக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், அவருடன் பாதுகாப்பில் இருந்த ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள், அந்த பாதையை சரி செய்ய முயன்றனர். அப்போது அந்த நபர்கள் சசி தரூரின் ஓட்டுநர் உட்பட பாதுகாப்பு வீரர்களையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு வீரர் ரதிஷ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில், " தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாதுகாவலர் நலமாக உள்ளார். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை மேற்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளரைப் பிரச்சாரம் செய்யவிடாமல் பாஜகவினர் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசி தரூரின் பாதுகாவலர் தாக்கப்பட்டுள்ளது கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வருகின்ற ஏப்ரல் 9 அன்று கேரளத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran