2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சரவை இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'இயக்க மறு சீரமைப்பு திட்டம்' என்ற பெயரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையில் ஜூலை 23 ஆம் தேதி முதல் சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்று வந்தது.
அந்த பயிற்சி கூட்டத்தில் இறுதி நாள் இன்று (01-08-26) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கலந்துகொள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து, இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ராகுல் காந்தி வழங்கினார்.
இந்த நிலையில், மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாம் கூட்டத்தில் ராகுல் காந்தி என்ன பேசினார்? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, 'தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய திசைதிருப்பமாக இருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருக்கிறோம். அதுமட்டுமல்லாம் புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான பயிற்சி முகாம் கிட்டத்தட்ட 10 நாள் நடந்தது. இந்த முகாமின் நிறைவு நாளில் ராகுல் காந்தி பங்கேற்று மாவட்டத் தலைவர்களுடன் கிட்டத்தட்ட 6 மணி நேரம் இருந்தார். எங்களுடைய அடுத்த நோக்கம் தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தான்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர இருப்பதாகவும், அதனை எல்லா கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என ராகுல் காந்தி சொன்னார். அதனை எங்களுடைய மாவட்டத் தலைவர்களுக்கு அவர் தெளிவாக சொன்னார். கட்சிப் பணிகளை மக்களுடன் சந்தியுங்கள் என்றும், சும்மா சத்தியமூர்த்தி பவனிலேயே அரசியல் செய்யாதீர்கள் என்றும் சொன்னார். மக்களிடம் செல்லுங்கள், உள்ளாட்சி தேர்தல் வரப்போகுது, அதில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னார்' என்று கூறினார்.

