Dailyhunt
சட்டமன்றத் தேர்தலில் அதிரடி திருப்பம்; முடிவில் இருந்து பின்வாங்கும் திருமாவளவன்?

சட்டமன்றத் தேர்தலில் அதிரடி திருப்பம்; முடிவில் இருந்து பின்வாங்கும் திருமாவளவன்?

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மார்ச் 29ஆம் தேதி திருமாவளவன் அறிவித்தார். 7 வேட்பாளர்களை அறிவித்த திருமாவளவன், தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் நிகழக்கூடும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவி வகித்த திருமாவளவன், அடுத்த 3 ஆண்டுகளிலேயே அரசியல் சூழ்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2014, 2019 ஆகிய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

2024ஆம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் சூழ்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குவதாகக் கூறப்பட்டது. இதனால் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட இருப்பதாகக் கருதப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (04-04-26) மற்றும் திங்கள் (06-04-26) ஆகிய நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் தனது அறிவிப்பை திருமாவளவன் திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக விசிக மாநில அமைப்புச் செயலாளர் இளமாறன் வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran