Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சீனாவில் இருந்துகொண்டே இந்தியாவில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை; மருத்துவர் சாதனை

சீனாவில் இருந்துகொண்டே இந்தியாவில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை; மருத்துவர் சாதனை

சீனாவில் இருந்துகொண்டே இந்தியாவில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர். மருத்துவத் துறையில் அடுத்தகட்ட முயற்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்து சாதனை.

அதாவது, ஐதராபாத்தில் சிறுநீரக சம்பந்தமான நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதன்படி, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து நுட்பமான அறுவை சிகிச்சைக்கான கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சீனாவின் வுஹானில் இருந்த இந்திய மருத்துவரான சையத் முகமது கௌஸ், முப்பரிமாண (3டி) கேமராக்களின் உதவியுடன் ரோபோட் இயந்திரங்களின் மூலமாக இந்த அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார்.

வுஹானின் டாங்ஜி மருத்துவமனையிலிருந்த மருத்துவர் கௌஸ், முப்பரிமாண கேமராக்களின் உதவியுடன் தோன்றும் நிகழ் நேரப் படங்களைப் பார்த்து, ரோபோக்களின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 5ஜி இணைய வலையமைப்பு 200 மில்லி விநாடிகளுக்குள் தகவல்களை உடனுக்குடன் அனுப்பியதால், அறுவை சிகிச்சையின் போது சீரான மற்றும் துல்லியமான செயல்பாடு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், அறுவை சிகிச்சையின் போது அவசர உதவி தேவைப்பட்டால் தங்களது பங்களிப்பை உறுதி செய்ய ஹைதராபாத் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் தயாராக இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது மருத்துவத் துறையில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்களை இந்தியாவின் சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran