சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சேர்ந்த 10 வயது சிறுமி, சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று அந்த சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்கின்ற பாம்பு தினேஷ் என்பவர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் அத்துமீறலில் ஈடுபட்டதை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற சிறுமி சித்தியிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த மே 3ஆம் தேதி இதுகுறித்த புகாரை சிறுமியின் பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
போக்சோ வழக்கு என்பதால் காசிமேடு போலீசார், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் 4ஆம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர் ஆனால் தினேஷ் ஆர் கே நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்கு சென்றிருந்ததால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் அனைத்து மகளிர் போலீசார், நேற்று இரவு அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பாம்பு தினேஷ், ஆர்.கே.நகர் தவெக எம்.எல்.ஏ மரிய வில்சனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

