தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் தவெக ஜெயித்திருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறுகிறார் விஜய்.
108 என்பதை 106 என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டு தொகுதிகலில் வெற்றிப் பெற்றுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்து விட வேண்டும். அப்போது தவெகவின் பலம் 107. பிறகு, சபாநாயகர் ஒருவர் தெர்ந்தெடுக்கப்பட்டால், 107 என்பது 106 ஆக மாறும்.
அந்த வகையில் பெரும்பான்மை பலத்திற்கு இன்னும் 12 இடங்கள் தவெகவுக்குத் தேவை. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் அவரிடம் இல்லாததே இந்த தடுமாற்றத்திற்கு காரணம். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசிடம் 5 இடங்கள் இருக்கிறது. விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக அவரிடம் காங்கிரஸ் மேலிடம் உறுதி தந்துள்ளது. அதனால், காங்கிரசின் ஆதரவு என்பது விஜய்க்கு எளிதாக கிடைத்து விடும். அதேசமயம், திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து உறுதி தந்துள்ளனர். இதனால், அந்த கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைப்பதில் உறுதியில்லை.
இதனால் அதிமுக கூட்டணி பக்கம் விஜய்யின் பார்வை திரும்பியுள்ளது. அங்கு பாமக அன்புமணியிடம் மட்டும் தான் 4 சீட்டுகள் இருக்கிறது. பாஜக மற்றும் அமமுக தலா 1 சீட் வைத்துள்ளனர். இதில் பாமகவின் ஆதரவை பெற தவெக தரப்பில் முயற்சிக்கப்பட்டது. அவர் நிறைய டிமாண்ட் வைத்து வருகிறார். 4 சீட் வைத்துள்ள பாமகவின் ஆதரவை பெற்றாலும் 9 சீட் (காங் 5 + பாமக 4 ) தான் கிடைக்கும். மேலும் 3 சீட் தேவைப்படுகிறது. அதனால், இப்படி உதிரி உதிரியாக ஆதரவை திரட்டுவதற்கு பதில், அதிமுகவின் ஆதரவை பெற்றால் என்ன? என்று ஆலோசித்து அதிமுகவை அணுகியுள்ளனர் தவெகவினர்.
இந்த நிலையில்தான், அதிமுகவின் மூத்த தலைவரான சி.வி. சண்முகம் எம்.பி, இந்த முறை மைலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிப் பெற்றுள்ளார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என அதிமுகவில் 15-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில், அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரத்தையும், ஆளுமையையும் அவரிடமிருந்து மீட்கும் முயற்ஸியில் ஈடுபட்டார் சி.வி.சண்முகம். அதன்படி நேற்று இரவு அதிமுகவின் 30 எம்.எல்.ஏ.க்களைத் திரட்டி ரகசிய மீட்டிங் நடத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். இந்த கூட்டத்தில், சட்டமன்ற அதிமுகவின் குழு தலைவராக சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக, தவெகவை ஆதரிக்கவும் தீர்மானித்துள்ளனர். அதிமுகவை உடைக்காமல், தவெகவுக்கு எந்த வகையில் ஆதரவு தெரிவிப்பது என்கிற நீண்ட ஆலோசனையும் நடந்துள்ளது. அதிமுகவில் நடக்கும் பரபரப்பு ஹாட் நியூஸ் இது தான்!

