மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் 29 சுற்றுலாப் பயணிகள் சொகுசு படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இந்த படகானது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமான 10 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பர்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் சிங் கூறுகையில், 'சுற்றுலாப் பயணிகளைப் பொழுதுபோக்கு சவாரிகளுக்காகத் தினமும் பலமுறை ஏற்றிச் செல்லும் இந்த சொகுசு படகு இன்று (30.04.2026) மாலை 06:15 மணியளவில் நீரில் மூழ்கியது. இக்கப்பலில் 29 சுற்றுலாப் பயணிகளும், 2 கப்பல் ஊழியர்களும் இருந்தனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைவரையும் மீட்பதே எங்களது முயற்சி' எனத் தெரிவித்துள்ளார். இந்த நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், 'மிகவும் பலத்த காற்று வீசியது. படகோட்டியிடம் மற்றொரு முனைக்கு வருமாறு கூறினோம். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. படகு மறுபுறம் நோக்கிச் சென்றது. அதனால் அணையின் நடுவில் கவிழ்ந்தது. லைஃப் ஜாக்கெட் (உயிர்காக்கும் அங்கி) அணிந்திருந்த சிலர் படகில் இருந்து கீழே குதித்தனர்.
நாங்கள் சுமார் 15-16 பேரை பத்திரமாக மீட்டோம். அவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். உடல்கள் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன' என்று கூறினார். சொகுசு படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

