Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சூழ்ச்சி அரசியலால் நம்பிக்கை இழந்தவர்களே த.வெ.க.வில் இணைகிறார்கள்" - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி!

"சூழ்ச்சி அரசியலால் நம்பிக்கை இழந்தவர்களே த.வெ.க.வில் இணைகிறார்கள்" - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி!

திமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், பெருந்துறை - ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் (தனி) - சத்யபாமா ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'தேர்தல் முடிந்த உடனே அதிமுக பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சராக ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அந்தக் கட்சியில், ஜெயலலிதாவுக்கு பல்வேறு இழப்புகளுக்கு காரணமானது திமுக என்பதே ஒவ்வொரு தொண்டரின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் எதிர்த்த ஒரு கட்சியுடன், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அதை கம்யூனிஸ்ட் தோழர்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்ததால் அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

திமுக ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 'நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்' என்று அறிவித்ததாலேயே நடந்தது அல்ல. பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற பின்னர், கம்யூனிஸ்ட் தோழர்கள், காங்கிரஸ் தோழர்கள், விசிக தோழர்கள் மற்றும் முஸ்லீம் லீக் சார்ந்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மு.க. ஸ்டாலின் மக்களிடம் நல்ல பெயர் பெறும் வகையில் அரசியல் சூழ்ச்சி ஒன்றை உருவாக்கினார். அந்த சூழ்ச்சி அதிமுக தொண்டர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களைத் தொடர்பு கொண்டு, 'ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் இன்று திமுகவுடன் சேர்ந்து சுயநல அரசியலில் சிக்கியுள்ளது; தமிழக வெற்றி கழகத்தில் நாங்கள் புதிய அதிமுகவைக் காண்கிறோம்' என்று தெரிவித்தனர்.

மேலும், வருங்காலங்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள். 2026 தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் மாறிவிட்டது. வரவிருக்கும் தேர்தல்களில் பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும் இணைந்து அரசியல் நடத்துவார்கள். அவர்களுக்கு ஊழலைத் தவிர வேறு எதுவும் இல்லை. கடந்த சில நாட்களில் டிடிசிபி, சிஎம்டிஏ, டாஸ்மாக், பதிவு துறை உள்ளிட்ட இடங்களில் ஊழல் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. சிஎம் ஃபண்ட், அமைச்சர் ஃபண்ட், எம்எல்ஏ ஃபண்ட், பார்ட்டி ஃபண்ட் போன்ற பல நிதிகள் ஒழிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செய்துள்ளளார்.

இத்தகைய தூய்மையான ஆட்சியை வழங்கும் சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் மு.க. ஸ்டாலின் பழனிசாமி ஆவார்கள். ஜெயலலிதா கொள்கைகளை மீறி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் அதிமுக தொண்டர்கள் தலைமை மீது நம்பிக்கை இழந்து, தமிழக வெற்றி கழகத்தை புதிய அதிமுகவாகக் கருதத் தொடங்கியுள்ளனர். மக்கள் சேவைக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மு.க. ஸ்டாலின் இதை 'குதிரைப் பேரம்' என விமர்சித்ததற்கு பதிலாக, முன்பு ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் போன்றோர் திமுகவுடன் சேர்ந்தபோது அது குதிரைப் பேரம் இல்லையா?. செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தபோது, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, பின்னர் தலைவர் விஜய்யை சந்தித்தார். இது ஜனநாயக முறையில் நடைபெற்றது.

ஒரு கட்சியை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின்றி உடைப்பது குதிரைப் பேரம். ஆனால் நம்பிக்கை இழந்து புதிய கட்சியில் இணைவது குதிரைப் பேரம் அல்ல. அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாத சூழல் உருவானதற்குக் காரணம், திமுக மற்றும் பழனிசாமி இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியே ஆகும். இதனால் பல எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் அரசியல் உரிமை உள்ளது. அவர்கள் முதலில் ராஜினாமா செய்து பின்னர் பேரவைத் தலைவர் மற்றும் முதலமைச்சரைச் சந்தித்து, பின்னர் முறையாக கட்சியில் இணைந்தனர்.

மு.க. ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் அவரது குடும்ப அரசியலும், பல துறைகளில் ஊழல் பரவியதும்தான். நெடுஞ்சாலைத் துறை, பதிவு துறை உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் மூலம் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டது. மக்கள் சாதி, மதம், பணம், பழைய அரசியல் ஆகியவற்றை நிராகரித்து மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். இந்த வெற்றி சாதி - மத அரசியலுக்கு எதிரான வெற்றியாகும். மேலும், எதிர்காலத்தில் இடைத்தேர்தல் வந்தால், திமுகவும் பிரச்சாரம் செய்யட்டும்; மக்கள் யாரைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். தமிழக வெற்றி கழகம் திறந்த அரசியல் செய்கிறது; ஒளிந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல் அல்ல. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் தமிழக வெற்றி கழகம் வரவேற்கத் தயாராக உள்ளது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொள்கைகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் ஒத்துப்போகின்றன. மாற்றத்திற்கான அரசியல் என்றாலும், எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர்கள், கட்சியின் அடிப்படை விதிமுறைகளையும் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு வந்தால் மட்டுமே அவர்களை கட்சியில் இணைக்கப்படும். இறுதியாக, திமுக மற்றும் அதிமுக இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் சூழ்ச்சி அரசியலால் நம்பிக்கை இழந்தவர்களே இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்கள், அவர்கள் அனைவரும் தூய்மையான ஆட்சிக்குத் துணை நிற்பார்கள்' எனத் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran