நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் தேடப்படும் பயங்கரவாதிகள் கலந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டு நடந்த ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் முக்கியச் சூத்திரதாரிகளில் ஒருவனான ஹம்ஸா பர்ஹான் கடந்த மே 21 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அதனைத் தொடர்ந்து, அடுத்து நாளான மே22 அன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் தேடப்படும் முதன்மை பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பகிரங்கமாகப் பங்கேற்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
'அர்ஜுமந்த் குல்சார் தார்' என்ற இயற்பெயர் கொண்ட ஹம்ஸா பர்ஹான் 'டாக்டர்' என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தான். தடை செய்யப்பட்ட 'அல்-பத்ர்' பயங்கரவாத அமைப்பின் தளபதியான இவனை, இந்திய அரசு கடந்த 2022-ல் அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதியாக அறிவித்தது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் பகுதியில் கல்லூரி முதல்வர் போல வேடமிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தான். கடந்த வியாழக்கிழமை (21/05/2026) காலை, கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, அடையாளம் தெரியாத நபர்களால் ஹம்ஸா பர்ஹான் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்நிலையில் இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பட்டியலில் இருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பகத் ஜமீன் கான், அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பின் உச்சகட்டத் தலைவர்கள், ஐஎஸ்ஐ அமைப்பினருடன் இணைந்து பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சமீபகாலமாக இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள் தொடர்ந்து மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு வருவதால், இந்த இறுதிச் சடங்கின் போது உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சையத் சலாஹுதீன் உள்ளிட்ட பயங்கரவாத தலைவர்களை சுற்றி ஏகே-47 துப்பாக்கிகளை ஏந்திய பயங்கரவாதிகள் பாதுகாப்பு வளையமாக நின்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
சர்வதேச அரங்கில் 'நாங்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை' என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் பொய்களை இந்தச் சம்பவம் மீண்டும் உடைத்துள்ளது. இந்தியாவின் 40 சிஆர்பிஎஃப் வீரர்களைக் கொன்ற ஒரு கொடூரமான பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத தலைவர்களும் பாகிஸ்தான் அதிகாரிகளும் தோளோடு தோள் நின்று பங்கேற்றிருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

