Dailyhunt
"தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு வந்து பேசுங்கள்" - பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்!

"தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு வந்து பேசுங்கள்" - பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்!

மிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் போகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சங்கரன்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (04-04-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், 'நாங்கள் கொள்கை கூட்டணியுடம் வந்து வாக்கு கேட்கிறோம். இன்னொரு பக்கம் பா.ஜ.கவும் அதிமுகவும் உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். அவர்களால் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று எதாவது சொல்ல முடிந்ததா? எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு இருக்கிறது. கூட்டணியாக இருந்தாலும் அதில் பல பேர் பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்.டி.ஏ தான் எங்கள் முகம் என்று சொல்கிறார்கள். ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்கு கூட பழனிசாமி தகுதி இல்லாதவர் என்று அன்புமணி சொன்னார். அதே போல் பழனிசாமியுடன் கூட்டணி வைக்க நான் விரும்பவில்லை வெட்கப்படுகிறேன் என பழனிசாமியின் திடீர் பங்காளி டிடிவி தினகரன் சொன்னார். பா.ஜ.கவில் இருப்பவர்கள் இன்னும் மோசமாக பேசினார்கள். இத்தனை முரண்பாடுகளை கொண்ட இவர்கள் ஊழலால் ஒன்று சேர்ந்து தங்களுடைய குடுமியை அமித்ஷாவிடம் கொடுத்துவிட்டு என்.டி.ஏ என்ற டப்பா என்ஜினில் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் அவதூறை பரப்புவதை தான் பிரச்சார யுக்தியாக பயன்படுத்தி வருகிறார்கள். பொய்களை பேசி, மக்களை பிளவுப்படுத்துகிறார்கள். 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை எல்லா துறையிலும் படுகுழியில் தள்ளிய அதிமுகவும், இந்தியாவை வரலாறு காணாத நிலைமைக்கு கொண்டு போய்க்கொண்டிருக்கூடிய பா.ஜ.கவும் சேர்ந்து அமைத்திருக்கிற கூட்டணி இந்த தேர்தலிலும் வழக்கம் போல் படுதோல்வியை தான் நீங்கள் பரிசாக தர வேண்டும். டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என்று வரும் அவர்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. என்.டி.ஏ என்பது மக்களை பற்றி துளியும் கவலைப்படாத ஒரு கூட்டணி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று ஏழைகளில் சுருக்கு பையில் இருந்து கூட பணத்தை உருவினார்கள். இப்போது சமையல் சிலிண்டருக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடிஜி வேர் இன் எல்பிஜி? (Modiji where is LPG?)என நாட்டு மக்கள் பிரதமரிடம் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு பதில் இருக்கிறதா? இந்த லட்சணத்தில் தொடர்ந்து சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, டோல்கேட் கட்டணம் என உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் காலத்திலேயே இப்படி விலையை உயர்த்தினார் என்றால் தேர்தல் முடிந்ததற்கு பிறகு எப்படி ஏற்றுவார்கள்? இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க தொடை நடுங்கி பழனிசாமிக்கு தெம்பு இருக்கிறதா?

நேற்று 6வது பாடத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் என்று சிபிஎஸ்சி அறிவித்திருக்கிறார்கள். அதற்காக எனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறேன். நாம் அமைதியாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்தியை திணித்து ஏதாவது செய்து தமிழ்நாட்டில் தனக்குத்தானே குழி தோண்டி கொள்ளும் வேலையை பா.ஜ.க அரசு சிறப்பாக செய்கிறார்கள். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கு நான் சவால் விடுகிறேன். தமிழ்நாட்டுக்கு நீங்கள் பிரச்சாரத்துக்கு வரும் போது தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால் வந்து பேசுங்கள் பார்க்கலாம். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அவர்களே, உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் ஒருவேளை இருந்தால் மும்மொழி கொள்கை தொடர்பான தர்மேந்திர பிரதானின் கருத்தை கண்டித்து உங்களால் அதை திரும்ப பெற வைக்க முடியுமா? சவால் விடுகிறேன்' என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran