தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், நிர்வாக நலன் கருதி ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமாரை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை இன்று (08.04.2026) மாலை 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யபப்ட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'ஒருதலைப்பட்சமாக தலைமைச் செயலாளர் இருந்த காரணத்தினால் தான் அவரை தேர்தல் ஆணையம் மாற்றிருப்பதாகத் தான் நான் கருதுகிறேன்' என்று கூறினார்.

