தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாக முன் அறிவிப்பு இல்லாத மின் வெட்டு தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சாலைக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பகலில் கிடைக்கும் மின்சாரம் கூட இரவில் கிடைக்காமல் பேரவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லப் போன அமைச்சர் ஜெகதீஸ்வரியே வேகமாகப் போகும் அளவிற்கு மின்வெட்டு பற்றி தொகுதி மக்கள் கேள்விகளை அடுக்கினர்.
இதே போலத் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த படம் வீடியோ வைரலானது. அதே நாளில் மேற்பனைக்காட்டில் கல்லணைத் தண்ணீரைப் பூஜைகள் செய்து பூ போட்டு வரவேற்கத் தயாரான போது மின்சாரம் தடைப்பட்டது. இப்படி தினம் தினம் மக்களின் அவதியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் மேலும் ஒரு படம் பரவத் தொடங்கியுள்ளது.
அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி செருவாவிடுதி வடக்கு கிராமத்தில் தனது தம்பி வீட்டுப் பாடம் எழுத அக்கா செல்போன் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த படம் தமிழ்நாட்டின் தற்போதைய மின்வெட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த படங்களுடன் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் பாடம் எழுத படிக்க அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்னும் சில நாடகளில் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் இரவு நேர மின்வெட்டு மாணவர்களின் படிப்பைக் கெடுக்கப் போகிறது என்கின்றனர் பொதுமக்கள்.
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டிற்குத் தமிழ்நாடு அரசு என்ன தீர்வு காணப் போகிறதோ? இதற்கும் வழக்கம் போல மடைமாற்றும் காரணம் சொல்லி புதுப் பிரச்சனைகளைக் கிளப்பிவிடப் போகிறார்களா? என்ற கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர். இதன் பிறகாவது மின்துறை அமைச்சர் வாய் திறப்பாரா?

