Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தமிழ்நாடு அரசு மிகவும் கண்டிப்புடன் செயல்பட வேண்டும்" - ஜவாஹிருல்லா

"தமிழ்நாடு அரசு மிகவும் கண்டிப்புடன் செயல்பட வேண்டும்" - ஜவாஹிருல்லா

மேகதாது அணைக் கட்டும் முயற்சியைக் கர்நாடகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேகதாது அனையினை கட்டும் முயற்சியைக் கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. காவிரி நதியின் கடைமடைப் பகுதியில் வாழும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரின் மீது முழுமையாகச் சார்ந்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏற்கனவே நீர்ப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு மேலும் குறையும் அபாயம் உருவாகியுள்ளது. இது விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் கடுமையாகப் பாதிக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளையும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் உணர்வையும் மதிக்காமல் கர்நாடக அரசு ஒருதலைபட்சமாகச் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்த பிரச்சினையில் உறுதியாகச் செயல்பட வேண்டும். மேகதாது அணை திட்டத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கக்கூடாது என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும். விவசாயிகளின் உயிர் வாழ்வையும், தமிழகத்தின் நீருரிமையையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து ஜனநாயக மற்றும் சட்டப் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மிகவும் கண்டிப்புடன் செயல்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran