Dailyhunt
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் பதவியேற்பு!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் பதவியேற்பு!

மிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், நிர்வாக நலன் கருதி ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமாரை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தீப் மிட்டல் தமிழ்நாடு அரசின் ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை இன்று (08.04.2026) மாலை 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் என்பவர் பதவி ஏற்றுள்ளார். தலைமை செயலாளர் முருகானந்தத்தை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ததைத் தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகித்து வந்த சாய் குமார் என்பவரை தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது. அதன்படி அவர் பதவி ஏற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது தனி செயலாளராக இருந்த சாய் குமார், 1990 ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran