திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார். இந்த விழா குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் நேற்று (24-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 'இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் தொடக்கத்தில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் முதலாவதாகப் பாடப்படும். அதனை தொடர்ந்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணை வேந்தர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

