Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்ட விவகாரம் : அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்ட விவகாரம் : அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒரு சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதாகவும், அதனால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ்.

மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் 'நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் திமுக எம்.எல்.ஏ. கதிரவனுடன் தொடர்புடையவை என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான விதிகளின் கீழ் வருவதால், இவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் கூட பெறாமல், நேரடியாக யு.ஜி.சி.யிடம் விண்ணப்பித்து அந்த அனுமதியைப் பெற்றுள்ளனர். அதேபோல், ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில் அந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற விண்ணப்பித்தது.

அந்த கல்வி நிறுவனத்தின் கீழ் பொறியியல் கல்லூரியும், மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்திடமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடமும் தடையில்லாச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். யுஜிசி விதிகளின்படி, 60 நாட்களுக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கருதப்படும். ஆனால், கடந்த ஆட்சியில் 60 நாட்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூன்று மாதங்கள் கழித்தே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். இவ்வாறு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டால், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறை பாதிக்கப்படும்.

குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை, எளிய மாணவர்களை சேர்க்க முடியாது. மேலும், கல்விக் கட்டணத்தையும் அரசு கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்திருந்தும், கடந்த ஆட்சியில் இந்த தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அந்த தடையில்லாச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அதனை வழங்கியது தற்போதைய அரசு அல்ல; கடந்த ஆட்சிதான். சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். அப்போது, 60 நாட்களுக்குள் அரசு நடவடிக்கை எடுக்காததால் அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும், பின்னர் வழங்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட உத்தரவை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இருப்பினும், இதையும் எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நான்கு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்லாமல், மேலும் இரண்டு கல்லூரிகளும் இதேபோன்று விண்ணப்பித்துள்ளன. அவற்றின் விஷயத்திலும் 60 நாட்களுக்குள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனுமதி வழங்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா என்ற எந்தத் தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவே கடந்த அரசின் நிர்வாக நிலையாக இருந்தது' என்று அமைச்சர் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran