Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தவெக ஆட்சியில் ஆறே மாதத்தில் எல்லாமே நாசம்" - மு.க.ஸ்டாலின் காட்டம்!

"தவெக ஆட்சியில் ஆறே மாதத்தில் எல்லாமே நாசம்" - மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தந்தை பெரியாரின், 'குடி அரசு' இதழின் முழு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று (22-11-26) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அந்த நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், 'தொழில்துறைக்கு வழிகாட்ட வேண்டிய அமைப்பு கூட, இன்றைக்கு வழி தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இவர்களால் , பக்கத்து மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை காமெடியனாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், இந்த ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி. அது கொஞ்ச நாட்களில் அப்கிரேட் ஆகி போதைப் பொருளுக்கும் வன்கொடுமைக்கும் இடையே தான் போட்டி. இப்போது, அரசாங்க உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே தான் போட்டி. அடுத்து என்ன வரும் என தெரியவில்லை.

தவெக அரசுடைய கிரைம் ரேட்டை பார்த்து மக்கள் கிறுகிறுத்து போயிருக்கிறார்கள். பட்டப்பகலில் இரட்டைக் கொலை, ஆளுங்கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைகள் என பெண்கள், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடவே முடியவில்லை. பயப்படக்கூடிய சூழல் வந்துவிட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல்கள் தமிழ்நாட்டில் தான் பிடிபடுகிறது. அதை பிடிப்பது மாநில காவல்துறை அல்ல, ஒன்றிய அரசுடைய துறை. குட்கா மாஜிக்களையும் மெத் பூபாலன்களையும் கட்சியில் வைத்திருந்தால் எப்படி பிடிக்க முடியும்? நமது ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு பணவீக்கத்துடைய பாதிப்பே தெரியாத நிலை இருந்தது. ஆனால் இன்று வெங்காயம், தக்காளியை கூட வாங்க முடியாத சூழல் வந்துவிட்டது. சாப்பிடாமல் இருந்தால் தான் மயக்கம் வரும் என்று நினைத்தால், இன்று அரிசி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது.

இதை பற்றி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி முதலமைச்சர் ஏதாவது வாய் திறந்து பேசுகிறாரா? இல்லை. கர்நாடகா முதலமைச்சர் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சவால் விடுகிறார். அதனை கண்டிக்காத முதல்வர், மாநில உரிமைகள் நிலைநாட்ட நீதியரசர் குரியன் ஜோசப் கமிட்டி அரசியல் காழ்புணர்ச்சியுடன் கலைத்துவிட்டார். ஆறே மாசம்..எல்லாமே நாசம் என்று சொல்கிற மாதிரி தவெக ஆட்சி நடக்கிறது. தவெக கட்சி அரசியல் பிணி மட்டுமல்ல, அது சமூக பிணி. அதை எதிர்த்து அரசியல் களத்தில் நாங்கள் போராடுகிற மாதிரி உங்களைப் போன்ற கருஞ்சட்டைகள் பிரச்சார களத்தில் முன்னின்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்' என்று பேசினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran