அண்மை காலமாக தவெகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவால் தவெக ஆட்சி அமைத்துள்ளதாகவும், தவெக அரசாங்கத்தின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்றும் இப்படியே தொடர்ந்து தங்களுடைய முடிவில் மாற்றங்கள் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.வீரபாண்டியன், 'தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பை மதிப்பளித்து நாங்கள் எடுத்த முடிவு. மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி எடுத்த முடிவு. எனவே ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு.
ஆதரவை விலக்கிக் கொள்கிற சூழல் ஏற்படுமேயானால் அதை அதையும் கட்சிதான் முடிவெடுக்கும். எவ்வளவு தான் செயலாளராக இருந்தாலும் எனக்கு அந்த அதிகாரம் இல்லை. கட்சிக்கு தான் அந்த அதிகாரம் உண்டு. எங்களை பொறுத்தவரை நாங்கள் வெளியிலிருந்து ஆதரிக்கிறோம், கூட்டணியில் இல்லை. கவிழ்க்கிற சிந்தனை உடையவர்கள் நாங்கள் அல்ல, கல்லடிக்கிற சிந்தனை, நிர்பந்தங்கள் தருகிற சிந்தனை உள்ளவர்கள் நாங்கள் அல்ல... அதற்கு மாறாக ஆதரவளித்தாலோ அல்லது எங்கள் ஆதரவு தேவையில்லை என்றாலும் நாங்கள் அரசின் பக்கம் அல்ல. உழைக்கிற மக்களின் பக்கம் ஏழைகளின் பக்கம் தான் நாங்கள் இருக்கிறோம். இதை உரக்க சொல்வோம் எப்பொழுதும் சொல்லுவோம். எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்க்கிற சிந்தனைகள் எங்களுக்கு இல்லை, கம்யூனிஸ்டகளுக்கு இல்லை.
அதே நேரத்தில் மதச்சார்பின்மையில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஏழைகள், உழைக்கிற மக்கள், தமிழக நலனில் உறுதியாக இருக்க வேண்டும். அதில் இடர்கிற போது, தடுமாறுகிற போது நாங்கள் எதிர்த்து போராடுவோம், குரல் எழுப்புவோம். எப்பொழுதும் எங்களுக்கு இது போன்ற தவறான சிந்தனைகள் இல்லை. ஒருவேளை அதுபோல மதச்சார்பின்மையை கடந்து சென்று ஒன்றிய அரசுடன் தவெக அரசு நகருமேயானால் அது குறித்து கட்சி அப்பொழுது உரிய முடிவெடுக்கும். அரசியல் அரங்கமே அமைதியாக இருந்த பொழுது நாங்கள் வேறொரு அணியில் வெற்றி பெற்றிருந்தாலும் ஜனநாயகத்திற்காக நாங்கள் வாக்களித்தோம் அல்லவா? கம்யூனிஸ்டுகள் சீர்தூக்கினோம் அல்லவா? எனவே இந்த அரசுக்கு ஆதரவு ஆதரவை விலக்கிக் கொள்வது என்பெல்லாம் கட்சி செய்கிற முடிவு. ஆனால் அதுவரை சமரசம் இல்லாமல் உழைக்கிற மக்களின் பக்கம் நிற்போம். அரசின் தவறு என்றால் விமர்சிப்போம், சரி என்றால் ஆதரிப்போம்' என்று கூறினார்.

